SELANGORYB ACTIVITIES

18 வயதினருக்கு வாக்குரிமை மறுப்பு- அரசுக்கு அரசியல் அர்ப்பணிப்பு இல்லை

ஷா ஆலம், மார்ச் 30- பதினெட்டு வயதானவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை மறுப்பதன் மூலம் சிறப்பான எதிர்காலத்தைக் காண வேண்டும் என்ற அரசியல் அர்ப்பணிப்பை கொண்டிராத அரசாங்கம் என்பதை பெரிக்கத்தான் நேஷனல் நிரூபித்துள்ளது.

பதினெட்டு வயது நிரம்பியவர்களுக்கான வாக்களிக்கும் உரிமையை ஒத்தி வைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் ஒருபோதும் மேற்கொண்டிருக்கக்கூடாது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வாக்களிப்பதற்கான வயது வரம்பை குறைக்கும் முடிவு அவசரகதியில் எடுக்கப்பட்டதல்ல. கடந்த 2018ஆம் ஆம் ஆண்டு இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது என்றார் அவர்.

நான் அரசியல் அர்ப்பணிப்புக்கு அதிக முக்கியத்துவம் தருகிறேன். அதே உணர்வு ஆட்சியாளர்களுக்கு இருந்திருந்தால் இதனை நடைமுறைப்படுத்தும்படி தேர்தல் ஆணையத்திற்கு அவர்கள் உத்தரவிட்டிருப்பார்கள் என அவர் சொன்னார்.

இயல்பாக வாக்காளராகும் நடைமுறை மற்றும் 18 வயதானவர்களுக்கு வாக்குரிமை ஆகியவை ஜனநாயக கோட்பாட்டிற்கேற்ப அமல்படுத்தப்பட வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கைகளாகும். இதனை எவ்வாறு? மற்றும் எப்போது? அமல்படுத்துவது என்பது தொடர்பான திட்டத்தை தேர்தல் ஆணையம் நிச்சயம் கொண்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பதினெட்டு வயது நிரம்பியவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கும் சட்டம் இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் தேதி அமலுக்கு வரும் என தேர்தல் ஆணையம் முன்பு கூறியிருந்தது. எனினும், எனினும், இந்த நடைமுறையை அமல் படுத்துவதை  அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதிக்கு அது ஒத்தி வைத்துள்ளது.


Pengarang :