ECONOMYSELANGORYB ACTIVITIES

செமினி, ரவாங்கில் 3,000 சிலாங்கூர் கூ வீடுகள் இவ்வாண்டில் தயாராகும்

ஷா ஆலம், ஏப் 4– சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 3,000 கட்டுபடி விலையிலான சிலாங்கூர் கூ வீடுகள் இவ்வாண்டு டிசம்பர் மாதத்திற்குள் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செமினி, உலு கிளாங், தெலுக் பங்ளிமா காராங், ரவாங், சுங்கை பூலோ ஆகிய பகுதிகளில் அந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம் ஒவ்வொரு மாதமும் புதிய வீடமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கி வருவதாக அவர் சொன்னார்.

வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்வதற்கான அனைத்து அனுமதியும் கிடைத்தப் பின்னர்  கட்டுமானப் பணிகள் சீராக மேற்கொள்ளப்படுவதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளர் ஊராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பை நாட வேண்டும் என்று அவர் கூறினார்.

இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற அடுக்குமாடி குடியிருப்புகளின் கூட்டு நிர்வாக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கான கருத்தரங்கை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, வாடகை கொள்முதல் திட்டத்திற்காக விஷேசமாக மேற்கொள்ளப்பட்டு வரும் 3,000 சிலாங்கூர் கூ ஹராப்பான் மற்றும் சிலாங்கூர் கூ இடாமான் வீடுகள்  இன்னும் ஈராண்டுகளில் முழுமையடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வீடுகளில் இரண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை வாடகைக்கு குடியிருக்கலாம். அதன் பின்னர் அந்த வீடுகளை சொந்தமாக்கிக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றார் அவர்.


Pengarang :