ECONOMYPENDIDIKANSELANGOR

ஐந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் அடிப்படையில் 3எம் திட்டம்- டாக்டர் உமா  ராணி தகவல்

கிள்ளான், ஏப் 19-கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களக்கு உதவும் வகையில்  செந்தோசா சட்டமன்றத் தொகுதி அமல்படுத்தியுள்ள ‘சினார் இல்மு ஹராப்பான் செந்தோசா‘ திட்டத்தின் கீழ் ஐந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் கல்விக் கற்றுத் தரப்படும்.

தாங்கள் இலக்காக கொண்டுள்ள மாணவர்கள் 3எம் எனப்படும் எழுத்து, வாசிப்பு மற்றும் கணக்கில் மிகவும் மந்தமாக உள்ளதால் இவர்களுக்கான மூன்று மாத கால பயிற்சித் திட்டத்தில் வேறு விதமான அணுகுமுறை கையாளப்பட வேண்டியுள்ளதாக இத்திட்ட இயக்குநர் டாக்டர் ஆர்.உமாராணி கூறினார்.

படிப்பது மற்றும் எழுதுவதன் வாயிலாக மட்டும் அவர்களுக்கு எந்த வகையிலும் உதவிட முடியாது. மாறாக கண்கள் நோக்குவதற்கும் செவிகள்  கேட்பதற்கும்  கரங்கள் உணர்வதற்கும் ஏற்ற வகையில் பல்வேறு அணுமுறைகளை இந்த கல்வித் திட்டத்தில் பயன்படுத்துகிறோம் என்ற அவர் சொன்னார்.

சொந்தோசா சட்டமன்றத் தொகுதியின் ஏற்பாட்டிலான இத்திட்டத்திற்கு கல்வியில் பின்தங்கியுள்ள 30 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு சனிக்கிழமை தோறும் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டடார்.

ஆறாண்டுகள் பள்ளியில் பயின்ற போதிலும் தங்களின் பெயரை எழுதத்  தெரியாத நிலையில் மாணவர்கள் இன்னும் உள்ளதால் இத்திட்டம் தங்களுக்கு பெரும் சவால்மிக்கதாக விளங்குவதாக சிலாங்கூர் டைலக்சியா சங்கத்தின் தலைவருமான அவர் சொன்னார்.

மூன்று மாத பயிற்சிக்குப் பின்னர் மாணவர்களின் கல்வித் திறன் மதிப்பீடு செய்யப்படும் என அவர் மேலும் கூறினார்.

இரண்டு முதல் மூன்று மணி நேரம் நடைபெறும் இந்த வகுப்புகளை நாங்கள் இலவசமாக நடத்துகிறோம்.  ஆனால் வெளியில் ஒரு மணி நேரத்திற்கு பாடம் நடத்துவதற்கு 250 வெள்ளி வரை கட்டணம் விதிக்கப்படுகிறது என்றார் அவர்.


Pengarang :