ECONOMYPBTSELANGOR

தடுப்பூசித் திட்டத்திற்கு  முதியோரை பதிவு செய்ய  கூட்டு நிர்வாக மன்றங்கள் உதவி

சுபாங் ஜெயா, ஏப் 19- கோவிட்-19 தடுப்பூசி திட்டத்திற்கு மூத்த குடிமக்களை பதிவு செய்வதில்  அடுக்குமாடி குடியிருப்புகளின் கூட்டு நிர்வாக மன்றங்கள் மற்றும் ருக்குன் தெத்தாங்கா அமைப்புகள் உதவவிருக்கின்றன.

தேசிய தடுப்பூசித் திட்டம் திட்டமிட்டபடி சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நகர்ப்புற நல்வாழ்வுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

தேசிய தடுப்பூசித் திட்டத்திற்கு அதிகமானோர் பதிவு செய்த மாநிலங்களில் சிலாங்கூர் முன்னிலை வகித்த போதிலும் இந்த எண்ணிக்கை இன்னும் போதுமானதாக இல்லை. இதன் அடிப்படையில்  நாம் செயல்பாடுகளை அதிகரித்துள்ளதோடு வீடு வீடாகச் சென்று தடுப்பூசித் திட்டத்திற்கு பதிவு செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.

இந்த தடுப்பூசி மிகவும் அவசியமானது என்பதால் 99 அல்லது 100 விழுக்காட்டு மூத்த குடிமக்கள் இத்திட்டத்திற்கு பதிந்து கொள்ள வேண்டும் என்று இங்குள்ள சுபாங் பெரேட் பேரங்காடியில் சிலாங்கூர் குரூம் பிக் தொழில்முனைவோர் கூட்டுறவுக் கழக விற்பனை மையத்தை திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்  தெரிவித்தார்.

தடுப்பூசி பெறுவது கட்டாயமாக்கப்படாத  போதிலும் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக அனைவரும் அத்தடுப்பூசியைப் பெறுவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

பிப்ரவர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை சுமார் 500,000 முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இம்மாதம் தொடங்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசித் திட்டத்தில் சுமார் 94 லட்சம் மூத்த குடிமக்கள் தடுப்பூசியைப் பெறுவர்.


Pengarang :