MEDIA STATEMENTNATIONAL

மூன்று காரணங்களுக்காக வார நாட்களில் மட்டும் எல்லை கடக்க அனுமதி

கோலாலம்பூர், ஏப் 20- மூன்று காரணங்களுக்காக மட்டுமே மாநில எல்லைகளைக் கடக்க அனுமதி வழங்கியுள்ள காவல் துறை, அத்தகைய பயணங்களை வார இறுதி நாட்களில் மேற்கொள்வதற்கும் தடை விதித்துள்ளது.

வேலை, மருத்துவம் மற்றும் கல்வி தொடர்பான காரணங்களுக்காக மட்டுமே மாநில எல்லைகளைக் கடக்க முடியும் என்று  தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.

எனினும், அப்பயணங்களை திங்கள் முதல் வியாழக்கிழமை வரை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும் வெள்ளி முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் அத்தகைய பயணங்களுக்கு முற்றாக தடை விதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த நான்கு நாட்களாக அதிகரித்து வரும் கோவிட்-19 சம்பவங்கள் குறித்து போலீஸ் துறை கவலை கொள்வதாக கூறிய அவர், அந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது என்றார்.

ஆபத்து அவசர காரணங்களுக்காவும் கணவர் தொலைவில் உள்ள கணவர் அல்லது மனைவியை சந்திப்பதற்காகவும் எல்லை கடப்பதும் கட்டுப்படுத்தப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இறப்பு போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள சம்பந்தப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதாவது, இறந்தவரின் தாய், தந்தை, பிள்ளகைள் மற்றும் சகோதரர்களுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படும் என்றார் அவர்.

திருமணம், விருந்து உள்ளிட்ட சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக எல்லை கடப்பதற்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்படும் தகவலையும் அவர் வெளியிட்டார்.

நோன்பு பெருநாள் முடியும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும் இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

 


Pengarang :