ECONOMYPENDIDIKANSELANGOR

பள்ளிகளுக்கு அருகே கோவிட்-19 பரிசோதனை இயக்கம்-மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், ஏப் 20- சிலாங்கூர் மாநிலத்தில் பள்ளிகளுக்கு அருகே உள்ள இடங்களை உள்ளடக்கிய இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் அடுத்த வாரம் தொடங்கி மேற்கொள்ளப்படும்.

பள்ளிகளை உள்ளடக்கிய தொற்று மையம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இலவச பரிசோதனை மேற்கொள்ளப்படும் இடங்களை சிலாங்கூர் சுகாதார இலாகா, சிலாங்கூர் கல்வி இலாகா, சிலாங்கூர் பேரிடர் மேலாண்மை பிரிவு, மாவட்ட அலுவலகம் ஆகிய தரப்பினரை உள்ளடக்கிய சிறப்பு பணிக்குழு அடையாளம் காணும் என்று அவர் சொன்னார்.

இந்த நோய்த் தொற்று சமூகத்தில் மேலும் பரவுவதை தடுப்பதற்கு ஏதுவாக வாகனங்களில் இருந்தவாறு கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ளும் சாத்தியத்தை தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் சுகாதார இலாகாவுடன் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ளும். நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கி தொடர்பில் இருந்தவர்கள் வசிக்கும் பகுதிகளை இலக்காக கொண்டு  இந்த இலவச  பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.

இம்மாதம் 19ஆம் தேதி வரை பள்ளிகளை உள்ளடக்கிய 12 தீவிர தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்ட வேளையில் அவற்றில் நான்கு தொற்று மையங்கள் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும்  பள்ளி பணியாளர்களை உள்ளடக்கிய  புதிய தொற்று மையங்கள் உருவாக்கத்தை மாநில அரசு கடுமையா கருதுவதாகவும் அவர் கூறினார்.

 


Pengarang :