ECONOMYPBTSELANGOR

நோய் அபாயம் நிறைந்த இடங்களில் விரைவில் கோவிட்-19 பரிசோதனை- மந்திரி புசார் தகவல்

காஜாங், ஏப் 23-  நோய் அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மாநில அரசு விரைவில் நடத்தும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நோன்பு பெருநாள் காலத்தில் நோய்ப் பரவல் மோசமான நிலையை அடைவதை தடுப்பதற்கும்  நோய்த் தொற்றின் நான்காவது அலை உண்டாவதை தவிர்ப்பதற்கும் ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.

இவ்விவகாரம் தொடர்பில் கல்வியமைச்சர் டாக்டர் முகமது ரட்ஸி முகமது ஜிடினுடன் நான் பேச்சு நடத்தினேன். பள்ளிகள் மற்றும் கல்விக் கூடங்களில் அதிகரித்து வரும் புதிய தொற்று மையங்கள் குறித்து நாங்கள் கவலையை வெளிப்படுத்தினோம். 

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் எண்ணிக்கை குறித்த விபரங்களைத் திரட்டி வருகிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் அந்த எண்ணிக்கை கிடைத்தவுடன் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபடுவோம் என்றார் அவர்.

இங்குள்ள பண்டார் பாரு பாங்கி சமூக வணிக மையத்தை தொடக்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக மாநிலத்தில் 19 பள்ளிகளை ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு கல்வியமைச்சு உத்தரவிட்டது.


Pengarang :