ECONOMYSELANGOR

கோல சிலாங்கூர் தடுப்பூசி மையத்திற்கு மந்திரி புசார் வருகை

கோல சிலாங்கூர், ஏப் 24– இங்குள்ள கோல சிலாங்கூர் உள்ளரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் மாவட்ட  நிலையிலான தடுப்பூசி செலுத்தும் மையத்தின் முன்னேற்பாடுகளை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று நேரில் பார்வையிட்டார்.

தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கோல சிலாங்கூர் மாவட்ட நிலையிலான தடுப்பூசி செலுத்தும்  நடவடிக்கை வரும் திங்கள் கிழமை தொடங்குவதாக மந்திரி அவர் சொன்னார்.

இந்த மையத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட 180,000 பேர் தடுப்பூசியைப் பெறுவர் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

இந்த தடுப்பூசித் திட்டத்திற்கு பதிந்து கொண்டவர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டவில்லை எனக் கூறிய அவர், இத்திட்டத்தில் விரைந்து பதிந்து கொள்ளும்படி  பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த பதிவு நடவடிக்கை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதை உறுதி செய்ய வட்டாரத் தலைவர்கள் தங்களின் பங்கினை முழுமையாக ஆற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தடுப்பூசியின் விநியோகத்தைப் பொறுத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர்  கூறினார்.


Pengarang :