ECONOMYPBTSELANGOR

ஷா ஆலம், கென் ரிம்பா பகுதியில்  குப்பை சேகரிப்பு மையம் நிர்மாணிக்க திட்டம்- கவுன்சிலர் சரவணன் தகவல்

ஷா ஆலம், மே 2- இங்குள்ள செக்சன் 16, கென் ரிம்பா அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் குப்பை அகற்றும் பணியை  முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நோக்கத்திற்காக அப்பகுதியில் குப்பை சேகரிப்பு மையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் எஸ்.பி. சரவணன் கூறினார்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ‘சி‘ புளோக்கில் முறையான குப்பை சேகரிப்பு மையம் இல்லாத நிலையில் குடியிருப்பாளர்கள் சாலையோரங்களிலும் வாகனம் நிறுத்துமிடங்களிலும் குப்பைகளை வீசியதால் அங்கு தூய்மைக்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் மத்தியில் கடும் புகார்கள் எழுந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியின் பல்வேறு பகுதிகளில் குப்பைத் தொட்டிகளை வைத்தும் கண்ட இடங்களில் குப்பைகளை வீசும் போக்கு தொடர்ந்து கொண்டே வந்தது என்றார் அவர்.

இதனைத் தொடர்ந்து ஷா ஆலம் மாநகர் மன்ற திடக்கழிவு பிரிவு அதிகாரிகளுடன் அப்பகுதிக்கு தாம் வருகை மேற்கொண்டதாக அவர் கூறினார். இந்த  வருகையின் பயனாக அங்கு குப்பை சேகரிப்பு மையம் அமைப்பதற்கு மாநகர் மன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது என்றார் அவர்.

சுமார் 20,000 முதல் 30,000 வெள்ளி வரை செலவு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்தை விரைந்து அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சரவணன் குறிப்பிட்டார்.

மேலும், மூன்று புளோக்குகளைக் கொண்ட இந்த கென் ரிம்பா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக சாலை விளக்குகளை பொருத்தவும் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. எனப்படும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Pengarang :