Hospital Sultanah Bahiyah
ECONOMYHEALTHNATIONAL

நோய்த் தொற்று அதிகரிப்பின் எதிரொலி- முழு அளவை எட்டும் மருத்துவமனைகள்- நோர் ஹிஷாம் கவலை

கோலாலம்பூர், மே 2- கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பு காரணமாக கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை முழு கொள்ளளவை எட்டியுள்ளது குறித்து சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ  டாக்டர்  நோர் ஹிஷாம் அப்துல்லா கவலை  தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரித்தால் சுகாதாரத் துறை கடும் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி வரும் என்பதோடு இதனால் பொதுமக்களுக்கு சுகாதாரச் சேவையை வழங்குவதில் எதிர்மறையான தோற்றமும் ஏற்படும் என்று அவர் சொன்னார்.

தற்போது சுங்கை பூலோ, கோலாலம்பூர், அம்பாங், செர்டாங், கிள்ளான் மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கட்டிகளில் 70 விழுக்காட்டுக்கு மேல் நிரம்பி விட்டன.

செலாயாங் மருத்துவமனை மற்றும் மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம் ஆகியவற்றில் கோவிட்-19 நோயாளிகளுக்கான  தீவிர சிகிச்சைப் பிரிவில் 50 விழுக்காட்டிற்கும் மேல் கட்டில்கள் நோயாளிகளைக் கொண்டுள்ளன என்றார் அவர்,

தற்போது கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் கோவிட்-19 நோயாளிகளுக்காக 108 வெண்டிலேட்டர் கருவிகள் தேவைப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம் மற்றும் புத்ரா ஜெயாவில் ஏழு மருத்துவமனைகள் கோவிட்-19  நோயாளிகளுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகள் மற்றும் இதர நோயாளிகளுக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில  227 கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 152 கட்டில்கள் கோவிட்-19 நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 88 விழுக்காட்டு கட்டில்கள் நிரம்பி விட்டன என்றார் அவர்.

 


Pengarang :