HEALTHMEDIA STATEMENTSELANGOR

கோவிட்-19 இலவச பரிசோதனை இயக்கத்தை தொடர்வதா? திங்களன்று முடிவெடுக்கப்படும்

ஷா ஆலம், மே 29- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை தொடர்வதா என்பது குறித்து வரும் திங்கள்கிழமைக்குள்  முடிவெடுக்கப்படும்.

அன்றைய தினம் நடைறும் தேசிய பாதுகாப்பு மன்றத்துடனான கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இலவச கோவிட்-19 பரிசோதனைக்கான வழி முறைகளை தொடர்பில் நாம் தேசிய  பாதுகாப்பு மன்றத்துடன் பேச்சு நடத்த வேண்டியுள்ளது. எந்த இடையூறும் நெருக்குதலும் இல்லாத பட்சத்தில் அதனை நாம் தொடர்ந்து நடத்துவோம் என்றார் அவர்.

எனினும், ஜூன் மாதம் முதல் தேதிக்கு முன்னதாக திட்டமிடப்பட்ட அனைத்து பரிசோதனை இயக்கங்களும் வழக்கம் போல் நடைபெறும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் 14ஆம்  தேதி வரை நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளும் முழுமையாக மூடப்படுவது தொடர்பான அறிவிப்பை அரசாங்கம் நேற்று வெளியிட்டது.

இம்மாதம் 8ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை தினசரி 2 தொகுதிகள் வீதம் மாநிலத்திலுள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும்  இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மாநில அரசு நடத்தி வருகிறது.


Pengarang :