D
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

அமைச்சின் அனுமதிக் கடிதங்கள் போலியாக தயாரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை

கோலாலம்பூர், ஜூன் 1- தொழில்துறைகள் தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதியளிக்கும் கடிதங்கள் போலியாக தயாரிக்கப்படுவதை தடுக்க உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவாகரத் துறை அமைச்சு வெளியிடும் அனுமதிக் கடிதங்களில் கியூ.ஆர். குறியீடுகள் இணைக்கப்படவுள்ளன.

அத்தகைய கடிதங்களின் உண்மைத் தன்மையை அறிய சாலைத் தடுப்புகளில் அவை ஸ்கேன்  செய்து பார்க்கப்படும் என்று  புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் நடவடிக்கை அதிகாரி எஸ்.ஏ.சி. எம்.வி. சிவகுமார் எம். நாயர் கூறினார்.

அந்த கடிதங்களை போலீஸ்காரர்கள் ஸ்கேன் செய்தவுடன் குறியீட்டு எண்ணை பதிவிடும்படி கேட்கப்படும். போலீசாரிடம் மட்டுமே இருக்கும் அந்த குறியீட்டு எண்ணை உள்ளிட்டவுடன் அந்த கடிதம் உண்மையானதா? போலியானதா? என்பதை காட்டி விடும் என்று அவர் சொன்னார்.

நேற்று நடைபெற்ற பி.டி.ஆர்.எம்.முடன் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற போது பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநில அல்லது மாவட்ட எல்லைகளைக் கடப்பதற்கான அனுமதியை வழங்குவதில் இரட்டைப் போக்கு கடைபிடிக்கப்படுவதாக சில தரப்பினர் கூறுவதில் உண்மை இல்லை என்றும் அவர் சொன்னார்.

போலீசார்  மேல் மட்டத்தினர், சாதாரண தரப்பினர் என பாகுபாடு பார்ப்பதில்லை. தகுந்த ஆவணங்களும் வலுவான காரணங்களும் இருக்கும் பட்சத்தில் எல்லை கடப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என அவர் விளக்கினார்.


Pengarang :