ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள மாபெரும் தடுப்பூசி செலுத்தும் மையம் திங்களன்று செயல்படத் தொடங்கும்

கோலாலாலம்பூர், ஜூன் 12– கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அதிக எண்ணிக்கையிலானோருக்கு தடுப்பூசி செலுத்தும் வசதி கொண்ட மற்றொரு மையமான ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள மைன்ஸ் அனைத்துலக மாநாட்டு மற்றும் கண்காட்சி மையம் வரும் திங்கள் கிழமை தொடங்கி செயல்படும்.

இந்த மையத்தில் தடுப்பூசி பெற முதல் நாளன்று 4,900 பேருக்கு அனுமதி வழங்கப்படுவதாக  கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை மன்றம் கூறியது. 

இந்த மையத்தில் 8,000 பேர் வரை தடுப்பூசி பெறுவதற்கான வசதிகள் இருந்த போதிலும் தடுப்பூசி செலுத்தும் இயக்கம் சீராகவும் எஸ்.ஒ.பி. விதிமுறைகளுக்குட்பட்டும்  நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தடுப்பூசி பெறுவோர் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக அது தெரிவித்தது.

இம்மையத்தில் தடுப்பூசி பெறுவோர் எண்ணிக்கை  கட்டங் கட்டமாக உயர்த்தப்படும். தடுப்பூசிக்கான முன்பதிவு செய்யும் முகப்பிடம் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 வரை திறந்திருக்கும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியை பொதுமக்கள் மைசெஜாத்ரா செயலி வாயிலாக தெரிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்ட  நெரிசலை தவிர்ப்பதற்கு ஏதுவாக தடுப்பூசி பெறுவதற்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு வந்து விடும்படி பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.


Pengarang :