ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

கோவிட்-19 நோய்த் தொற்றின் எதிரொலி- ஹோட்டல் துறைக்கு வெ.500 கோடி இழப்பு

ஷா ஆலம், ஜூன் 16– நாட்டிலுள்ள ஹோட்டல் துறைக்கு இவ்வாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் 500 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் எதிரொலியாக ஹோட்டல்களில் தங்குவோர் எண்ணிக்கை குறைந்த காரணத்தால் இந்த இழப்பு ஏற்பட்டதாக மலேசிய ஹோட்டல் சங்கத்தின் தலைமை செயல் முறை அதிகாரி யாப் லிப் செங் கூறினார்.

வாடகைக்கு எடுக்கப்பட்ட ஹோட்டல் அறைகளின் சராசரி எண்ணிக்கை கடந்த ஜனவரியில் 21 விழுக்காடாகவும் பிப்ரவரியில் 17 விழுக்காடாகவும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 27 விழுக்காடாவும் இருந்ததாக அவர் சொன்னார்.

இந்த அறைகள் பெரும்பாலும் நோய்த் தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தும் நோக்கத்திற்காக வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த எண்ணிக்கை மே மாதம் 18 விழுக்காடாகவும் இம்மாதம் 15 விழுக்காட்டிற்கும் குறைவாகவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வருமான பாதிப்பு காரணமாக பல ஹோட்டல்கள் சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நடவடிக்கையினால் முதலில் பாதிக்கப்படுவது அங்கு வேலை செய்யும் பணியாளர்கள்தான் என்றார் அவர்.

நாட்டிலுள்ள 28 விழுக்காட்டு ஹோட்டல்கள் பாதிக்கும் மேற்பட்டத் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துள்ள வேளையில் 51 விழுக்காட்டு ஹோட்டல்கள் கணிசமான அளவு தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளன என அவர் மேலும் சொன்னார்.


Pengarang :