ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

இ-பாசார் ராயா இயக்கத்தின் வழி 95.4 கோடி வெள்ளி வசூல்- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், ஜூன் 24– இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட இ- பாசார் ராயா இயக்கத்தின் வாயிலாக வெ.6.5 கோடி மதிப்புள்ள நேரடி விற்பனை தவிர்த்து 95 கோடியே 40 லட்சம் வெள்ளி மதிப்பிலான பொருளாதார தாக்கத்தையும் சிலாங்கூர் பதிவு செய்தது.

மே மாதம் 29 ஆம் தேதி வரை நடைபெற்ற அந்த இயக்கம் நிர்ணயிக்கப்பட்ட 70 கோடி வெள்ளி இலக்கை தாண்டியதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இது தவிர, 134,025 வர்த்தர்களும் இந்த இயக்கத்தில் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 22,049 பேர் புதிதாக சேர்ந்தவர்களாவர். தொடக்கத்தில் நாங்கள் கணித்த இலக்கான 12,500 பேரை விட இது 76 விழுக்காடு அதிகமாகும். இந்த இயக்கத்தின் வாயிலாக அதிகமான இணைய வணிகர்கள் பயன் பெற்றுள்ளதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது என்றார் அவர்.

நேரடி விற்பனை 163 விழுக்காடு அதிகரித்துள்ளதை ஆகக்கடைசி தரவுகள் காட்டுவதோடு சிலாங்கூர் பொருளாதாரம் மீது 139 விழுக்காடு சிற்றலை விளைவையும் ஏற்படுத்தியுள்ளது என்று அவர் சொன்னார்.

இயங்கலை வாயிலாக நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். தொழில் துறை மற்றும் வாணிக துறைக்கான ஆட்சிக்குழு  உறுப்பினர்  தெங் சாங் கிம், மாநில செயலாளர் டத்தோ நோர் அஸ்மி டிரோன், நிதி அதிகாரி டத்தோ ஹரிஸ் காசிம், சிலாங்கூர் மீடியா தலைமை செயல்முறை அதிகாரி முகமது ஃபாரிட் அஸாரீ  ஆகியோரும் இச்செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்திலும் வர்த்தகர்களால் நிறைவான வருமானத்தை ஈட்ட முடியும் என்பதை இந்த இயக்கம் காட்டுவதாக மந்திரி புசார் குறிப்பிட்டார்.

நோன்பு பெருநாளின் போது வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளை ஈடு செய்வதற்கு இலக்கவியல் வர்த்தகம் பெரிதும் துணை புரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :