ECONOMYHEALTHPBTSELANGOR

முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி அடுத்த வாரம் முற்றுப் பெறும்

ஷா ஆலம், ஜூன் 25– சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பராமரிப்பு இல்லங்களைச் சேர்ந்த முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முதலாவது டோஸ் தடுப்பூசியை செலுத்தும் பணி அடுத்த வாரம் முடிவுக்கு வரும்.

இதனைத் தொடர்ந்து படுக்கையில் இருக்கும் நோயாளிகளை இலக்காக கொண்டு அடுத்தக் கட்ட தடுப்பூசி செலுத்தும் இயக்கம் மேற்கொள்ளப்படும் என்று சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர்  ஷஹாரி ஙடிமான் கூறினார்.

நடமாட முடியாத நிலையிலிருக்கும் நோயாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான அடுத்தக் கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம். இந்நோக்கத்திற்காக 17 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்படும் என்றார் அவர்.

இங்குள்ள செக்சன் 19, எம்.பி.எஸ்.ஏ. தஞ்சோங் மண்டபத்தில் உள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்தில் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு ஷா ஆலம் மாநகர் மன்ற ஏற்பாட்டில் உணவுக் கூடைகள் வழங்கும் நிகழ்வை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மத்திய அரசின் மற்றும் சுகாதார அமைச்சின் பராமரிப்பு மையங்கள், சட்டம் 506 மற்றும் சட்டம் 586 இன் கீழ் செயல்படும் மையங்கள், லைசென்ஸ் இன்றி செயல்படும் தனியார் பராமரிப்பு மையங்களில் தங்கியிருப்போருக்கு தடுப்பூசி செலுத்தும்  இந்த “அவுட்ரிச்“ திட்டம் கடந்த 8ஆம் தேதி தொடங்கப்பட்டது.


Pengarang :