ECONOMYMEDIA STATEMENTPENDIDIKANSELANGOR

செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் மாணவர்களுக்கு இலவச  வகுப்புகள்- பெற்றோர் மகிழ்ச்சி

ஷா ஆலம், ஜூன் 25- செந்தோசா சட்டமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில்  கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்காக நடத்தப்படும்“ நம்பிக்கை கல்வி ஒளி“ திட்டத்திற்கு பெற்றோர்களிடமிருந்து  நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.

இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட இரண்டே மாதங்கள்  ஆன போதிலும் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படுவது குறித்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தனது மகன் ஊ சின் யோன் (வயது 10) மலாய் மொழியில் மேம்பாடு கண்டுள்ளதோடு அவரால்  எழுத்துக் கூட்டி வாசிக்கவும் முடிவதாக அவரின் தாயார டான் அய் கெங் (வயது 40) கூறினார்.

இந்த வகுப்பில் சேர்ந்தது முதல் தன் மகனின் கல்வியில்  நல்ல முன்னேற்றம் தெரிவதோடு புதிய பாடங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் காரணமாக வகுப்பு மீண்டும் திறக்கப்படும் நாளுக்காக ஆர்வத்துடன் காத்திருப்பதாக அவர் சொன்னார்.

இந்த இலவச வகுப்பினை ஏற்பாடு செய்த  சட்டமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் குணராஜ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கல்வியில் பின்தங்கிய மற்றும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இத்திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

இந்த இலவச வகுப்பு குறித்து தாம் பள்ளி ஆசிரியர் மூலம் தெரிந்து கொண்டதாக மற்றொரு பெற்றோரான வான் நுருள் அக்மா வான் கசாலி கூறினார். 

இந்த வகுப்பில் பங்கேற்றதன் வழி என் மகள் நோர் அய்னா முக்லிஸ்யா அஸ்லி (வயது 9) தற்போது எழுத்துக் கூட்டி வாசிக்கும் திறனைப் பெற்றுள்ளார். வகுப்பு முடிந்த பின்னரும் பாடங்களை மனப்பாடம் செய்யும் முயற்சியில் அவர் தொடர்ந்து ஈடுபடுகிறார் என்று வான் நுருள் தெரிவித்தார்.

வேலைக்குச் செல்லும் காரணத்தால் தங்கள் பிள்ளைகளுக்கு பாடங்களைச் சொல்லித் தரும்  வாய்ப்பு இல்லாத பெற்றோர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டத்தை அமல் செய்த டாக்டர் குணராஜ் அவர்களுக்கு தாம் நன்றி கூறுவதாகவும் அவர குறிப்பிட்டார்.

கல்வி கற்பதில் சிரமத்தை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மூன்று மாத கால இலவச கல்வித் திட்டத்தை  செந்தோசா சட்டமன்றத் தொகுதி கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி தொடக்கியது.

எண், எழுத்து மற்றும் வாசிப்பில் மாணவர்கள் அடிப்படை ஆற்றலை பெற்றிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் நடத்தப்படும் இந்த வகுப்பில் பங்கேற்க  9 முதல் 13 வயது வரையிலான 20 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :