ECONOMYHEALTHPBTSELANGOR

பொதுமுடக்க காலத்தில் வியாபாரம் செய்ய தற்காலிக லைசென்ஸ்- ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், ஜூன் 29- கோவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டு சிறிய அளவில் வியாபாரம் செய்ய விரும்புவோர் ஊராட்சி மன்றங்களிடம் தற்காலிக லைசென்ஸ் பெற விண்ணப்பிக்கலாம்.

வர்த்தக நடவடிக்கையை எளிதாக்கவும் போக்குவரத்துக்கு இடையூறின்றி பாதுகாப்பான இடத்தில் வர்த்தகம் புரிவதை ஊக்குவிக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டுள்ளதால் அங்காடி வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த பெருந்தொற்று காரணமாக மக்களின் வாழ்க்கை பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. தங்கள் வாழ்க்கையைத் தொடர்வதற்கு அவர்கள் சிறு அளவிலான வர்த்தகத்தை தேர்தெடுக்கின்றனர் என்றார் அவர்.

இது போன்ற சூழ்நிலையில் அத்தகையத் தரப்பினர் தற்காலிக  வர்த்தக லைசென்சுக்கு விண்ணப்பம் செய்வதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். மக்கள் வருமானம் ஈட்டுவதற்கு தேவையான உதவிகளை வழங்க சிலாங்கூர் அரசாங்கம் எப்போதும் தயாராக உள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் வியாபாரம் செய்து வருமானம் ஈட்டுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு லைசென்ஸ் வழங்கும்படி அனைத்து ஊராட்சி மன்றங்களுக்கும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உத்தரவிட்டிருந்தார்.


Pengarang :