ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

பி40 தரப்பினர், மூத்த குடிமக்களுக்கு 500,000 தடுப்பூசிகள்- சிலாங்கூர் அரசு இலவசமாக வழங்கும்

ஷா ஆலம், ஜூன் 30- மூத்த குடிமக்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு ஐந்து லட்சம் தடுப்பூசிகளை சிலாங்கூர் மாநில அரசு இலவசமாக வழங்கவுள்ளது.

செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில தடுப்பூசித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த சலுகையின் வழி 250,000 பேர் பயன் பெறுவர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மூத்த குடிமக்கள், குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் மற்றும் பெடுலி ராக்யாட் மக்கள் பரிவுத் திட்டத்தில் பங்கேற்றவர்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு  இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதரப் பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அவசியத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று செல்வேக்ஸ் திட்டம் தொடர்பான சிறப்பு அறிவிப்பை இயங்கலை வாயிலாக வெளியிட்ட போது அவர் தெரிவித்தார்.

மாநிலத்தில் நோய்த்  தொற்றை விரைந்து முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஏதுவாக சிலாங்கூர் அரசு சொந்தமாக தடுப்பூசியை வாங்கும் என்று மந்திரி புசார் கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி அறிவித்திருந்தார்.

சினோவேக் தடுப்பூசியின் மலேசியாவுக்கான ஏகபோக விநியோகிப்பாளரான பர்மாநியாகா நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பயனாக 25 லட்சம் தடுப்பூசிகள் தருவிக்கப்பட்டன.  இதன் வழி 12 லட்சத்து 50 பேர் பயன்பெறுதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


Pengarang :