ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

சிலாங்கூர் அரசிடம் தடுப்பூசி வாங்க 62,000 நிறுவனங்கள் ஆர்வம்

ஷா ஆலம், ஜூலை 6- செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில அரசின் தடுப்பூசித் திட்டத்தின் வாயிலாக தங்கள் தொழிலாளர்களுக்கு தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மாநிலத்திலுள்ள 62,000 நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன.

தங்கள் நிறுவனங்களில் பணி புரியும் சுமார் 29 லட்சம் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி பெறுவதற்கு ஏதுவாக தடுப்பூசித் திட்டத்தில் பங்கு பெற அந்நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன என்று தொழில்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

தொழில்துறையினருக்காக 20 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் தொழிற்சாலை மற்றும் சேவைத் துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், அதிகத் தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலைகள் மற்றும் 200க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் மீதும் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.

பதிவு பெற்று சிலாங்கூர் அல்லது கிள்ளான் பள்ளத்தாக்கில் செயல்படும் தொழிற்சாலைகள் மற்றும் 21 அத்தியாவசியத் துறைகளில் இடம் பெற்றுள்ள தொழிற்சாலைகள் செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரிஸ் திட்டத்தில் பிரதான இலக்காக கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு ஏதுவாக செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரிஸ் திட்டத்தின் கீழ் சிலாங்கூர் அரசு 20 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ளது.

இரண்டு டோஸ் தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கு உண்டாகும் அனைத்து செலவினங்களையும் சேர்த்து முதலாளிகள் அல்லது நிறுவனங்களுக்கு 350 வெள்ளி கட்டணம் விதிக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


Pengarang :