HEALTHMEDIA STATEMENTNATIONALPBT

தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை  தொடர்ந்து அதிகரிப்பு

கோலாலம்பூர், ஜூலை 8- தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அப்பிரிவுகளில் கட்டில்களின் பயன்பாடு 90 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

நோய்த் தொற்று குறைவதற்கான அறிகுறி தற்போது வரை காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் நோய்த் தொற்றின் தினசரி எண்ணிக்கை சராசரி 6,539 ஆகப் பதிவானதாக அவர் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை தினசரி 4,000க்கும் கீழ் இருக்க வேண்டும் என்ற தேசிய மீட்சித் திட்டத்தின் இலக்கை விட இது அதிகமாகும் என்றார் அவர்.

அளவுக்கு அதிகமான நோய்த் தொற்று சம்பவங்களை நீண்ட காலத்திற்கு எதிர் கொள்ள வேண்டிய நிர்பந்தம் காரணமாக மருத்துவத் துறையைச் சேர்ந்த முன்களப் பணியாளர்கள் உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் சோர்ந்து விட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் கோவிட்-19 நோய்த்  தொற்று எண்ணிக்கை அண்மைய சில நாட்களாக ஏழாயிரத்தில் நிலை கொண்டுள்ளது. இன்று அந்த எண்ணிக்கை 7,097 ஆக பதிவான வேளையில் சிலாங்கூரில் 3,119 நேர்வுகள் அடையாளம் காணப்பட்டன.

கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட 948 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் 441 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 


Pengarang :