ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல கட்டணக் கழிவு- 1,000 பேர் விண்ணப்பம்

ஷா ஆலம், ஜூலை 8- கிராப் மின் வாடகைக் கார் சேவை மூலம் தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்குச் செல்வோருக்கு 20 வெள்ளி கட்டணக் கழிவு வழங்கும் திட்டம் அனைத்து வயதினருக்கும் விரிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதன் தொடர்பான அறிவிப்பை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று வெளியிட்டது முதல் இன்று மதியம் 12.00 வரை இந்த விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதாக எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் வர்த்தக சமூக கடப்பாட்டு பிரிவின் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

சுமார் 95 விழுக்காட்டினரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறோம். காரணம் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை அவை பூர்த்தி செய்துள்ளன என்று அவர் சொன்னார்.

கிராப் வாடகை கார் சேவையை பதிவு செய்திருக்க வேண்டும், சிலாங்கூர் முகவரியை கொண்டிருக்க வேண்டும் மற்றும் தடுப்பூசி பெறுவதற்கான தேதி செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்னதாக இருக்க வேண்டும் என்ற எளிதான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விண்ணப்பங்களை பரிசீலிக்க குறைந்தது 24 மணி நேரம் பிடிக்கும் என்பதால் தடுப்பூசி பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட அதே தேதியில் கட்டணக் கழிவுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.


Pengarang :