ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

இந்திய வர்த்தகர்களுக்கு உதவ ஹிஜ்ரா சிலாங்கூர்  ஒரு கோடி வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜூலை 12- “வியாபாரம்@சித்தம்“ எனும் திட்டத்தின் வாயிலாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்திய சமூகத்தினருக்கு உதவும் நோக்கில் சிறப்பு மூலதன சுழல் நிதியாக ஒரு கோடி வெள்ளியை  ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது.

சித்தம் எனப்படும் சிலாங்கூர் இந்தியர் தொழில் ஆர்வலர் மையத்தின் 2,000 பங்கேற்பாளர்கள் மற்றும் புதிதாக பதிந்து கொண்டவர்கள் அந்த திட்டத்தின் வாயிலாக பயன்பெறுவர் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

வர்த்தகர்கள் தங்கள் தொழிலை பாதியில்  நிறுத்தாமல் தொடர்ந்து மேற்கொள்வதை உறுதி செய்யும் நோக்கில் இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது. கடனுதவி அல்லது வர்த்தகத்திற்கான உபகரணங்களைப்  பெற்ற பலர் மூலதனப் பற்றாக்குறை காரணமாக தங்கள் வியாபாரத்தை தொடர்வதில் சிக்கலை எதிர்நோக்குவதை நாங்கள் உணர்ந்துள்ளோம் என்றார் அவர்.

ஆகவே, சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு கடனுதவி வழங்கும் நோக்கில் “வியாபாரம்@சித்தம்” எனும் திட்டத்தை மாநில அரசு ஹிஜ்ரா சிலாங்கூர் வாயிலாக அமல்படுத்தியுள்ளது என்றார் அவர்.

2021 ஆம் ஆண்டிற்கான சித்தம் அமைப்பின் பிரத்தியேக திட்டங்களுக்கான பதிவு இயக்கத்தை  கூகுள் மீட் வாயிலாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

வர்த்தகத்தில் ஈடுபாடு கொண்ட இந்திய தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல், மானியம் மற்றும் வர்த்தக உபகரணங்களை வழங்குவதை இலக்காக கொண்ட இந்த சித்தம் திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டில் தொடக்கப்பட்டது.

இந்த திட்டம் தொடர்பில் ஹிஜ்ரா சிலாங்கூர் அகப்பக்கம் வாயிலாகவும் 106-951 2458 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.


Pengarang :