ECONOMYMEDIA STATEMENTNATIONAL

எம்.பி.க்கள் சொத்து மதிப்பை அறிவிப்பதை கட்டாயமாக்க சட்டம் தேவை- எம்.ஏ.சி.சி. பரிந்துரை

ஷா ஆலம், ஜூலை 14- நிர்வாகத் தரப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேலவை உறுப்பினர்கள் தங்கள் சொத்துக்களை அறிவிப்பதை கட்டாயமாக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட  வேண்டும் என்று மலேசிய ஊழல் தடுப்பூ ஆணையம் (எம்.ஏ.சி.சி.) பரிந்துரைத்துள்ளது.

தங்கள் சொத்து மதிப்பை அறிவிக்காதவர்களை தண்டிக்கும் எந்த விதிமுறையும் தற்போது அமலில் இல்லை என்று எம்.ஏ.சி.சி.யின் துணைத் தலைமை ஆணையர் (தடுப்பு நடவடிக்கை) டத்தோஸ்ரீ ஷம்சுன் பஹாரின் முகமது ஜமில் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்து மதிப்பை மக்களைவைத் தலைவரிடமும் அதன் நகலை ஊழல் தடுப்பு ஆணையத்திடமும் வழங்குவதை கட்டாயமாக்கும் தீர்மானத்தை மக்களவை கடந்த 2019ஆம் ஆண்டு ஏகமனதாக நிறைவேற்றியது என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் எம்.ஏ.சி.சி. வெறும் ஆவணப் பராமரிப்பாளராக மட்டுமே செயல்பட முடியும். சொத்து மதிப்பு பிரகனடப்படுத்தப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பின்னர் அதனை எம்.ஏ.சி.சி. தனது அகப்பக்கத்தில் வெளியிடும் என்றார் அவர்.

இம்மாதம் 6ஆம் தேதி வரை 97 நிர்வாக அதிகாரிகள், 198 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 39 மேலவை உறுப்பினர்கள் தங்கள் சொத்து விபரங்களை அறிவித்துள்ளனர். ஆறு நிர்வாக அதிகாரிகள், 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 26 மேலவை உறுப்பினர்கள் அவ்வாறு செய்யவில்லை என அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட தரப்பினர் சொத்து மதிப்பை அறிவிப்பது தொடர்பான எந்த விஷேச சட்டமும் இதுவரை அமலில் இல்லை எனக் கூறிய அவர், ஆதலால் அறிவிக்கப்பட்ட சொத்து ஆவணங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை தங்களால் மேற்கொள்ள இயலவில்லை என்றார்.

இதன் காரணமாக, வருமானத்திற்கு மீறி ஆடம்பரமாக வாழ்வோர் பற்றிய தகவல் கிடைக்கும் போது 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 36வது பிரிவைப் பயன்படுத்தி தாங்கள் நேரடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்


Pengarang :