ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

கிள்ளான் பள்ளத்தாக்கு, நெகிரி செம்பிலானுக்கு 20 லட்சம் தடுப்பூசிகள் விநியோகம்-

கிள்ளான், ஜூலை, 14- அடுத்த மாதம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படும் 20 லட்சம் தடுப்பூசிகள் சிலாங்கூர், கோலாலம்பூரை உள்ளடக்கிய கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய பகுதிகளுக்கு ஆகஸ்டு மாத தொடக்கத்தில் விநியோகிக்கப்படும்.

நோய்த் தொற்று தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கும் முயற்சியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று  பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.

இதே நோக்கத்திற்காக அனைத்து கோவிட்-19 மதிப்பீட்டு மையங்களும் (சி.ஏ.சி.) கூடுதல் பணியாளர்களுடன் தினசரி செயல்படும் என்று அவர் சொன்னார்.

பரிசோதனைக்காக வரும் நோயாளிகள் எதிர்நோக்கும் சுவாசப் பிரச்னையை கருத்தில் கொண்டு சி.ஏ,சி. மையங்களில் ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இம்மாதம் 11 ஆம் தேதி வரை சிலாங்கூரில் 286,352 பேர்  கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட வேளையில் கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் 88,352 பேருக்கு அந்நோய் அடையாளம் காணப்பட்டது என்றார் அவர்.

நாட்டில் பதிவான மொத்த கோவிட்-19 சம்பவங்களில் இது 45 விழுக்காடாகும். அதே சமயம் சிலாங்கூர், புத்ரா ஜெயா, கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் 2,700 மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் அவர்  கூறினார்.


Pengarang :