ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

ஊழல் குற்றச்சாட்டிலிருந்து துங்கு அட்னான் விடுதலை

புத்ரா ஜெயா, ஜூலை 16- வர்த்தகர் ஒருவரிடமிருந்து 20 லட்சம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ துங்கு அட்னான் மன்சோரை இங்குள்ள மேல் முறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது.

மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ சுராயா ஓத்மான் தலைமையிலான மூவர் கொண்ட நீதிபதிகள் குழு 2-1 என்ற பெரும்பான்மையில் துங்கு அட்னானில் முறையீட்டை ஏற்றுக் கொண்டு அவரை விடுவித்தது.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர்  மாதம் 21ஆம் தேதி ஊழல் குற்றச்சாட்டில்  துங்கு அட்னான் குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு 12 மாதச் சிறைத்தண்டனையும் 20 லட்சம் வெள்ளி அபராதமும்  விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தீர்ப்பை எதிர்த்து துங்கு அட்னான் செய்திருந்த மேல் முறையீட்டில் நீதிபதி டத்தோ அகமது நஸ்பி நீதிபதி சுராயாவுக்கு ஆதரவாவும் நீதிபதி டத்தோ அபு பாக்கார் ஜாய்ஸ் எதிராகவும் தீர்ப்பை வழங்கியிருந்தனர்.

இதன் அடிப்படையில் துங்கு அட்னானுக்கு எதிராக  உயர் நீதிமன்றம் வழங்கிய 12 மாதச் சிறை மற்றும் 20 லட்சம் வெள்ளி அபராதத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

தனது அதிகாரத்துவ பணியுடன் எசட் காயாமாஸ் சென். பெர்ஹாட் நிறுவனம் தொடர்புடையது எனத் தெரிந்தும் அந்நிறுவன இயக்குநர் டான்ஸ்ரீ சாய் கின் கோங்கிடமிருந்து கூட்டரசு பிரதேச அமைச்சர் என்  முறையில் 20 லட்சம் வெள்ளிக்கான காசோலையைப் பெற்றதாக 70 வயதான துங்கு அட்னான் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஈராண்டு வரையிலானச் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 165வது பிரிவின் கீழ் அவர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.


Pengarang :