ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த குடியிருப்பு பகுதிகளில் தடுப்பூசி  இயக்கம்

ஷா ஆலம், ஜூலை 18- கோவிட்-19 நோய்த் தொற்று அதிகம் உள்ள குடியிருப்பு பகுதிகளை மையமாக கொண்டு தடுப்பூசி இயக்கத்தை மேற்கொள்ளும் புதிய அணுகுமுறையை சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா மேற்கொள்ளவுள்ளது.

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்போர் தவிர்த்து நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்களும் விரைவாக தடுப்பூசி பெறுவதை உறுதி செய்யக்கூடிய சிறந்த அணுகுமுறையாக இது விளங்குவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கிளாங் ஜெயா, தாமான் டேசாவான் வீடமைப்பு பகுதியில் உள்ள 1,600 பேருக்கு இந்த வழிமுறை முதன் முறையாக பயன்படுத்தப்பட்டதாக கூறிய அவர், இதர வீடமைப்பு பகுதிகளுக்கு  இதனை விரிவுபடுத்தப்படும் என்றார்.

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்குட்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு மட்டுமின்றி நோய்த் தொற்று அதிகம் காணப்படும் பகுதிகளிலும் இத்தகைய தடுப்பூசி இயக்கத்தை மாநில சுகாதார இலாகா மேற்கொண்டு வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு மாத காலத்தில் சுமார் 100 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று கண்டறியப்பட்டதைத்  தொடர்ந்து தாமான் டேசாவான் பகுதியில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படவிருந்ததாகவும் எனினும், காலப்போக்கில் அந்த எண்ணிக்கை குறைந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்பகுதியில் வசிக்கும் அனைவருக்கும்  கோவிட்-19 பரிசோதனை மேற்கொண்டு நோய்த் தொற்று இல்லாதவர்களுக்கு  தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.


Pengarang :