ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

7,000 டியூஷன் சிலாங்கூர் பங்கேற்பாளர்களுக்கு இலவச இணைய வசதி

ஷா ஆலம், ஜூலை 29- சிலாங்கூர் மக்கள் டியூஷன் திட்டத்தில் (பி.டி.ஆர்.எஸ்.) பங்கேற்றுள்ள சுமார் 7,000 பேர் வரும் அக்டோபர் மாதம் தொடங்கி ஓராண்டு காலத்திற்கு இலவச இணைய தரவு சேவையைப் பெறுவர்.

இந்த சிலாங்கூர் இணைய தரவு திட்டத்தின் மூலம் செல்கோம் மற்றும் டிஜி நிறுவனங்களின் வாயிலாக 15 கிகாபைட் தரவு மற்றும் யுனிஃபை வாயிலாக 45 கிகாபைட் தரவு வழங்கப்படும் என்று எம்.பி.ஐ.எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் சமூக கடப்பாட்டு பிரிவு தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

இத்திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இணைய கோட்டா அளவுக்கான கட்டணத்தை எம்.பி.ஐ. பிசினஸ் அமால் தரப்பு ஏற்றுக் கொள்ளும். நடப்பு மாதத்திற்கான கோட்டா அளவை தாண்டும் பட்சத்தில் உண்டாகும் கூடுதல் கட்டணத்தை பயனீட்டாளர்களே செலுத்த வேண்டும் என்று அவர் சொன்னார்.

இந்த இணைய தரவு திட்டத்தில் பி.டி.ஆர்.எஸ். பங்கேற்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனக்கூறிய அவர், தகவல்களைத் திரட்டும் பணி மற்றும் பதிவு நடவடிக்கை தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

பங்கேற்பாளர்கள் மேற்கண்ட மூன்று தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றின் சேவையைப் பெறலாம் என்பதோடு இதற்காக தங்கள் வசமுள்ள நடப்பு தொலைபேசி எண்களை  மாற்ற வேண்டியதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் கீழ் சுமார் 70,000 பேர் பயன்பெறும் வகையில் சிலாங்கூர் இணைய தரவு சேவைத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்த அறிவிப்பை மந்திரி புசார் அண்மையில் வெளியிட்டார்.


Pengarang :