ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

புதிய வகை நோய்த் தொற்றுகளை முறியடிக்கும் ஆற்றல் தடுப்பூசிகளுக்கு உண்டு

கோலாலம்பூர், ஜூலை 29- அண்மைய காலமாக தோன்றி வரும் வீரியமிக்க புதிய வகை நோய்த் தொற்றுகளை எதிர் கொள்ளும் ஆற்றல் நடப்பிலுள்ள கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு உள்ளதா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மக்கள் மத்தியில் எழுந்துள்ள இந்த கேள்வி உலக சுகாதார நிறுவனத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. புதிதாக தோன்றும் நோய்த் தொற்றுகளை முறியடிக்கும் ஆற்றல் தாங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளுக்கு உள்ளதை உறுதி செய்யும்படி தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு அது உத்தரவிட்டுள்ளது.

நம் நாட்டிலும் நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் ஆற்றல் விவாதத்திற்குரிய ஒரு விஷயமாகிவிட்டது. குறிப்பாக சீனாவின் மருந்து தயாரிப்பு நிறுவனமான சினோவேக் பயோடெக் லிமிடட் நிறுவனத்தால் வெளியிடப்படும் சினோவேக் தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்தும் அரசாங்கத்தின் முடிவு மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்துரைத்த மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் சுகாதார சுற்றுச்சூழல் துறைக்கான மூத்த விரிவுரையாளர் டாக்டர் யுஸியானா முகமது யூசுப், கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டாகும் கடுமையான விளைவுகளைத் தடுப்பதில் ஃபைசர், சினோவேக், ஆஸ்ட்ராஸேனேகா ஆகிய தடுப்பூசிகள் ஆக்ககரமான பயனைத் தருவதாக கூறினார்.

இந்த தடுப்பூசிகள் கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்படுவதற்கு காரணமாக விளங்கும் சார்ஸ்-கோவி-2 வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பளிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஃபைசர், ஆஸ்ட்ராஸேனேகா மற்றும் சினோவேக் தடுப்பூசிகளின் வேறுபாடு குறித்து விளக்கிய டாக்டர் யுஸியானா,  ஃபைசர் மற்றும் ஆஸ்ட்ராஸேனேகா  ஆகிய தடுப்பூசிகள் ஸ்பைக் புரோட்டின் எனப்படும் முள் நிறைந்த உருள்வடிவ வைரசிற்கு எதிராக தடுப்பாற்றலை உருவாக்குகிறது. அதே சமயம், சினோவேக் தடுப்பூசி ஸ்பைக் புரோட்டின் உள்பட வைரசின் முழு கட்டமைப்புக்கு எதிராக தடுப்பாற்றலை உருவாக்குகிறது  என்று அவர் தெளிவுபடுத்தினார்.

கோவிட்-19 வைரஸ் மனித உடலில் நுழைவதற்கான செல்களின் நுழைவாயிலாக இந்த ஸ்பைக் புரோட்டின் செயல்படுகிறது. ஸ்பைக் புரோட்டினை இலக்காக கொண்ட தடுப்பு மருந்து அதன் மீது படரும் பட்சத்தில் கோவிட்-19 வைரஸ் மனித செல்களில் நுழைவது தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த வைரஸ் செயலிழந்து போவதால் மனித செல்களில் நுழைந்து பல மடங்காக பெருக்கம் காண்பது தடுக்கப்படுகிறது என்றார் அவர்.

 


Pengarang :