ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

குகுசான் செமாராக் பகுதியில் இன்று முதல் பி.கே.பி.டி. அமல்- 5,200 பேர் பாதிப்பு

பெட்டாலிங் ஜெயா, ஆக 6- கோத்தா டாமன்சாரா, பி.ஜே.யு.5, குகுசான் செமாராக் பகுதியில் இன்று தொடங்கி கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை (பி.கே.பி.டி.) அமல்படுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியிலுள்ள குடியிருப்பாளர்கள் குறிப்பாக அந்நிய நாட்டினர் மத்தியில் கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பெட்டாலிங் மாவட்ட அதிகாரி டத்தோ ஜொஹாரி அனுவார் கூறினார்.

இவ்வாண்டு தொடங்கி இதுவரை குகுசான் செமாராக் பகுதியில் 350 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அண்மைய காலமாக இப்பகுதியில் நோய்த் தொற்று ஏறுமுகமாக உள்ளது என்றார் அவர்.

இப்பகுதியில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் அந்நிய நாட்டினர் பற்றிய விபரங்கள் சுகாதார இலாகாவின் கவனத்திற்கு வராமல் போவது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது என்று அவர் மேலும் சொன்னார். நேற்று இரவு அந்த குடியிருப்பு பகுதியில் பி.கே.பி.டி. அமலாக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பி.கே.பி.டி. அமல்படுத்தப்பட்ட இதர இடங்களில் மேற்கொள்ளப்பட்டதைப் போல் இங்கும் விரைவில் தடுப்பூசி செலுத்தும் இயக்கம் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டப் பின்னர் நோய்த் தொற்றினால் பாதிக்கப்படாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றார் அவர்


Pengarang :