ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

கோவிட்-19 நோயாளிகளைக் கவனிக்க 750 மருத்துவமனைகளில் இராணுவ வீரர்கள்

கிள்ளான், ஆக 8- கோவிட்-19 நோயாளிகளைக் கவனிப்பதில் முன்களப் பணியாளர்களுக்கு உதவ 750 ஆயுதப் படை வீரர்கள் கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள மருத்துவமனைகளில் பணியமர்த்தப்படுவர் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

நோயாளிகள் செயற்கை சுவாசத்தைப் பெறுவதற்கு ஏதுவாக ஆக்சிஜன் கலங்களை கொண்டு வருவது உள்ளிட்ட பணிகளுக்கு இந்த ஆயுதப்படை வீரர்களின் உதவி பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்கு ஆள்பற்றாக்குறை நிலவி வந்தது. இதன் அடிப்படையில் கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள மருத்துவமனைகளில் 750 வீரர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். அவர்களில் 90 பேர் கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் சேவையை வழங்குவர் என்றார் அவர்.

ஒரு ஆக்சிஜன் கலம் மூலம் நோயாளிக்கு எட்டு மணி நேரத்திற்கு ஆக்சிஜன் வழங்க முடியும். அதன் பின்னர் அந்த கலத்தை மாற்ற வேண்டும். இந்த பணியின் போது ஏற்படும் தாமதம் நோயாளியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றார் அவர்.

தற்காப்பு அமைச்சருமான இஸ்மாயில் சப்ரி, முன்னதாக கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் சுமார் ஒரு மணி நேரத்தை செலவிட்டு அங்குள்ள நிலவரங்களை கண்டறிந்தார்.

நிர்வாக நடைமுறைகள் காரணமாக மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதில் காணப்படும் தாமதப் போக்கை களைவது உள்பட பல்வேறு விவகாரங்கள் தரம் உயர்த்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 


Pengarang :