ECONOMYHEALTHMEDIA STATEMENTPBT

“ரைட்“ திட்ட பங்கேற்பாளர்களுக்கான வயது வரம்பு 40 ஆக அதிகரிப்பு

ஷா ஆலம், ஆக 16- “ரைட்“ எனப்படும் ரோடா டாருள் ஏசான் திட்டத்தில் பங்கேற்றுள்ள இணைய வழி உணவு விநியோகிப்பாளர்ளுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்துவதற்கு சிலாங்கூர் அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த அனுமதியின் வழி 30 முதல் 40 வயது வரையிலானவர்கள் இந்த ரைட் திட்டத்தில் பங்கேற்பதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இளைய தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டு உணவு விநியோகப் பணியில் ஈடுபட்டுள்ள பலர் நடுத்தர வயதினராக உள்ளதைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.

நோய்த் தொற்று பரவலால் இளைஞர்கள் மட்டுமின்றி 30 வயதைக் கடந்தவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பலர் வருமானம் ஈட்டுவதற்கு  உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றார் அவர்.

இதனைக் கருத்தில் கொண்டு இளைஞர்களை  மட்டுமின்றி 30 முதல் 40  வயது வரையிலானவர்களையும் இத்திட்டத்தில் சேர்ப்பதற்கான செயலறிக்கையை தயாரிக்கும்படி சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தின் நிர்வாக இயக்குநர் முகமது நிஜாம் மர்ஜூக்கியை நான் பணித்துள்ளேன் என்று அவர் மேலும் சொன்னார்.

இந்த ரைட் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இவ்வாண்டு இறுதி வரை வரவேற்கப்படுவதாக கூறிய அவர், ஆர்வமுள்ளோர் https://msnselangor.gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்றார்.

 


Pengarang :