ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

பொது பூங்காக்களில் எஸ்.ஒ.பி. விதிகளை கடைபிடிப்பீர்- எம்.பி.எஸ்.ஏ. வலியுறுத்து

ஷா ஆலம், ஆக 28– பொது பூங்காக்களில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) முறையாக பின்பற்றும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற 14 முதல் 28 நாட்களைக் கடந்தவர்கள் மட்டுமே பூங்காக்களுக்கு வர முடியும் என்ற நிபந்தனையும் அதில் ஒன்றாகும் என்று ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் (எம்.பி.எஸ்.ஏ.) வர்த்தக மற்றும் பொது உறவு பிரின் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

அதே சமயம் இங்கு வருகை புரிவோர் ஒன்று கூடுவதை தவிர்த்து கூடல் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பொது பூங்காக்களில் உள்ள விளையாட்டு சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது எனக் கூறிய அவர், வருகையாளர்கள் எஸ்.ஒ.பி. விதிகளை முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்யும் பணியில் மாநகர் மன்றத்தின் பணியாளர்கள் ஈடுபடுவர் என்றார்.

இங்குள்ள பொழுதுபோக்கு பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெரும்பாலான வருகையாளர்கள் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதைக் காண முடிந்தது.

எனினும், ஒரு சிலர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெறாத நிலையிலும் நிர்ணயிக்கப்பட்ட விதிகளை மீறி சிறு வயது பிள்ளைகளை உடன் அழைத்துக் கொண்டும் பூங்காக்களுக்கு வந்துள்ளதையும் காண காண முடிந்தது.

தேசிய மீட்சித் திட்டத்தின் முதலாவது கட்ட அமலாக்கத்தின் கீழ் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் இம்மாதம் 22ஆம் தேதி அகற்றியது.


Pengarang :