ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சந்தாதாரர்கள் இழப்பீடு பெறுவதை எளிதாக்க சொக்சோ-சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பு

ஷா ஆலம்,  ஆக 30- சந்தாதார்கள் இழப்பீட்டைப் பெறும் நடைமுறைகளை எளிதாக்க சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனம் சிலாங்கூரிலுள்ள அனைத்து 56 சட்டமன்ற உறுப்பினர்களுடனும் அணுக்கமான உறவை ஏற்படுத்தவுள்ளது.

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் “சஹாபாட் பெர்கேசோ பிரிஹாத்தின்“ எனும் செயலியை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதோடு தொகுதியில் இறந்தவர்கள் உள்பட பிரச்னைக்குரியவர்கள் பற்றிய விபரங்களை அதில் பதிவிட வேண்டும் என்று மாநில பெர்கேசோ இயக்குநர் ஜைனால் அபு கூறினார்.

சந்தாரர்களுக்கு நாங்கள் விரைந்து உதவி புரிய இந்நடவடிக்கை பெரிதும் துணை புரியும். அசம்பாவிதங்கள் நிகழும் பட்சத்தில் அதற்கான இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பலர் இன்னும் அறியாமலிருக்கின்றனர் என்று அவர் சொன்னார்.

கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் ஷாத்திரி மன்சோரும் பத்து தீகா உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயிலும் இத்திட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த விவகாரத்தை நாங்கள் மந்திரி புசாரின் கவனத்திற்கும் கொண்டுச் சென்றுள்ளோம் என்றார் அவர்.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவியது முதல் அந்நோயினால் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொக்சோ சார்பாக 30 லட்சம் வெள்ளி வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பில் பெறப்பட்ட 3,649 விண்ணப்பங்களில் 3,591 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதாக கூறிய அவர், வேலையிடங்களில் கோவிட்.19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் மட்டுமே இழப்பீடு பெற முடியும் என்றார்.

 


Pengarang :