ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

சுங்கை காண்டீஸ் தொகுதி மக்களுக்கு 2,000 உணவுக் கூடைகள் விநியோகம்

ஷா ஆலம், ஆக 31- கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட சுங்கை காண்டீஸ் தொகுதி மக்களுக்கு இவ்வாண்டில் இதுவரை 2,000 உணவுக் கூடைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த உணவுக் கூடைகளை பெற்றவர்களில் பெரும்பாலோர் வேலை இழந்தவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினராவர் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவி முகமது முக்னி கூறினார்.

சிரமத்தில் உள்ள குடும்பத்தினர் உணவுப் பொருள் பற்றாக்குறைப் பிரச்னையை எதிர் நோக்காமலிருப்பதை உறுதி செய்ய அவர்களுக்கு அரசி, எண்ணெய், சீனி, மாவு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன என்று அவர் சொன்னார்.

இந்த உணவுக் கூடை திட்டத்திற்கு ஐ.ஒ.ஐ. கார்ப்ரேஷன் மற்றும் ஜி.எம்.கிளாங் போன்ற நிறுவனங்கள் தங்கள் நிறுவன சமூக கடப்பாட்டின் அடிப்படையில் உதவிகளை நல்கியதாக அவர் குறிப்பிட்டார்.

நாடு பெருந்தொற்று பிரச்னையை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் வருமானம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் நிறுவனங்கள் அரசு சாரா அமைப்புகளும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :