ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

தடுப்பூசி சான்றிதழ் பெற மருத்துவர்களுக்கு லஞ்சமா? எம்.ஏ.சி.சி. விசாரணை

புத்ரா ஜெயா, செப் 1- கோவிட்-19 தடுப்பூசியைப் பெறாமல் தடுப்பூசி சான்றிதழைப் பெறுவதற்கு மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதாக வெளிவந்த புகாரை மலேசிய ஊழல் தடுப்பூ ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கடுமையாக கருதுகிறது.

இவ்விவகாரம் தொடர்பில் தமது தரப்பு விசாரணை மேற்கொண்டு வருவதாக எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அஸாம் பாக்கி அறிக்கை ஒன்றில் கூறினார்.

இப்புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் மருத்துவ துறைக்கு இது பெரும் இழுக்கை ஏற்படுத்தும் என்பதோடு சம்பந்தப்பட்ட மருத்துவர்களின் நற்பெயருக்கும் களங்கத்தை உண்டாக்கும் என்று அவர் சொன்னார்.

தடுப்பூசி சான்றிதழ் பெற மருத்துவர்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டது தொடர்பில் எங்களுக்கு இதுவரை எந்தப் புகாரும் கிடைக்கவில்லை. இத்தகைய முறைகேடுகள் நிகழ்வதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் கண்காணிப்பு மற்றும் விசாரணையை மேற்கொண்டு வருவோம் என்றார் அவர்.

தடுப்பூசிக்கான இலக்கவியல் சான்றிதழைப் பெற தங்கள் உறுப்பினர்களுக்கு 1,000 வெள்ளி வரை லஞ்சம் தர சில தரப்பினர் முன்வந்துள்ளதாக மலேசிய தனியார் துறை மருத்துவர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் ஸ்டீவன் சோ கூறியிருந்தார்.

அனைவரும் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடவில்லை. தடுப்பூசிக்கு எதிரான மனப்போக்கை கொண்டவர்களும் உடனடியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளவர்களும் தான் இத்தகையச் செயல்களின் ஈடுபடுகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த லஞ்சப் புகார் தொடர்பில் அமலாக்கத் தரப்பினர் விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மலேசிய மருத்துவர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர்  எம்.சுப்பிரமணியம் வலியுறுத்தினார்.


Pengarang :