ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

பூச்சோங் இண்டா தடுப்பூசி மையம் மூடப்பட்டது

ஷா ஆலம், செப் 7- கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி முதல் செயல்பட்டு வந்த பூச்சோங் இண்டா தடுப்பூசி மையம் நேற்று முன்தினம் முழுமையாக மூடப்பட்டது.

அந்த மையம் செயல்பட்ட ஒரு மாதத்திற்கும் மேற்பட்ட காலத்தில் 51,834 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. இம்மையத்தில் 25,190 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியும் 26,644 பேர் இரண்டாது டோஸ் தடுப்பூசியும் பெற்றனர்.

சமூகத்தில் நோய்த் தடுப்பாற்றலை உருவாக்குவதில் இந்த தடுப்பூசி மையம் பெரும் பங்கினை ஆற்றியதாக கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி சிறந்த அணுகுமுறையாக விளங்குவதாக கூறிய அவர், இன்னும் தடுப்பூசி பெறாதவர்கள் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தடுப்பூசி மையங்களில் அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வீடு வீடாகச் சென்றும் தடுப்பூசியின் முக்கியத்துவதை கின்ராரா தொகுதி மக்களுக்கு குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு உணர்த்துவதற்கான நடவடிக்கையை தாங்கள்  மேற்கொண்டு வந்ததாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

வட்டார மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்துவதற்காக பூச்சோங்கில் சிறிய அளவில் தடுப்பூசி மையம் அமைக்கும்படி தேசிய தடுப்பூசி நடவடிக்கை மன்றத்தை தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கடந் ஜூன் மாதம் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 26 ஆம் தேதி பூச்சோங் இண்டாவிலுள்ள எம்.பி.எஸ்.ஜே. மண்டபத்தில் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டது.


Pengarang :