ECONOMYHEADERADMEDIA STATEMENT

பாரம்பரிய உடம்புபிடி சிகிச்சை நிலையங்கள் மீண்டும் செயல்பட அனுமதிப்பீர்- குணராஜ் வேண்டுகோள்

கிள்ளான், செப் 8- தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்ட அமலாக்கத்தின் போது பார்வையற்றவர்களால் நடத்தப்படும் பாரம்பரிய உடம்புபிடி மற்றும் சிகிச்சை நிலையங்கள் மீண்டும் செயல்படுவதற்கு ,  அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தியுள்ளார்.

சிகையலங்கரிப்பு மையங்கள் மற்றும் முக ஒப்பனை நிலையங்கள் கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகளுடன் மீண்டும் செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டதைப் போல் பாரம்பரிய உடம்பு பிடி நிலையங்கள் செயல்படுவதற்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

இது போன்ற பாரம்பரிய உடம்பு பிடி நிலையங்கள் மற்றும் சிகிச்சை மையங்களை பார்வையற்றவர்கள் அரசாங்கத்தின் அனுமதியுடன் முறையாக நடத்தி வருகின்றன. குறிப்பாக பாதங்களை நீவிவிடும் சேவையை வழங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையே அவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர். இத்துறை தொடர்ந்து மூடப்படும் பட்சத்தில் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்றார் அவர்.

இத்தகைய உடம்புபிடி  நிலையங்களை நடத்துவோரின் பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு காணப்படாவிட்டால் இத்துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 30,000 தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும் என்றும் அவர் சொன்னார்.

உடம்பு பிடி நிலையங்கள் சம்பந்தப்பட்ட தொற்று மையங்கள் தற்போது அடையாளம் காணப்படாததால் அத்துறையை மீண்டும் திறப்பதற்கான சாத்தியத்தை அரசாங்கம் ஆராய வேண்டும் என்று இந்திய சமூகத்திற்கான மந்திரி புசாரின் சிறப்பு பிரதிநிதியுமான அவர் தெரிவித்தார்.

 


Pengarang :