ECONOMYMEDIA STATEMENTSELANGOR

1,805 விவசாயிகளுக்கு வெ.813,900 மதிப்பில் உதவித் திட்டங்கள்

ஷா ஆலம், செப் 8– கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட 1,805 விவசாயிகளுக்கு கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி வரை 813,900 வெள்ளி மதிப்பிலான உதவித் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

கித்தா சிலாங்கூர் 1.0 உதவித் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு கால்நடைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கான  தீவனங்கள், பெட்ரோலுக்கான உதவித் தொகை வழங்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூரிலுள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு உதவும் அதேவேளையில் மாநிலத்தில் உணவு விநியோகம் சீராக உள்ளதை உறுதி செய்வதற்கும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

அந்த மூன்று உதவித் திட்டங்களும் முழுமையாக வழங்கப்பட்டு விட்டதை மந்திரி புசார் தனது அதிகாரப்பூர்வ முகநூல் வாயிலாக வெளியிட்ட விளக்கப்படம்  காட்டுகிறது.

சுமார் 270,000 வெள்ளி மதிப்பிலான கால்நடைத் தீவனங்கள் 300 பேருக்கு வழங்கப்பட்டன. 138,600 வெள்ளி மதிப்பிலான நீர்வாழ் உயிரினங்களுக்கான  தீவனங்களை 154 பேரும் 405,300 வெள்ளி மதிப்பிலான பெட்ரோலுக்கான பற்றுச் சீட்டுகளை 1,351 பேரும் பெற்றுள்ளனர்.

இது தவிர இயற்கை உரங்கள் மற்றும் விவசாயத்திற்கான கச்சாப் பொருள்களை விநியோகிக்கும் பணியும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ கித்தா சிலாங்கூர் திட்டத்தின் கீழ் 7 கோடியே 39 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படும் என்று மந்திரி புசார் கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி அறிவித்திருந்தார்.


Pengarang :