ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALPBT

தாமான் ஸ்ரீ மூடாவில் நீர் சேகரிப்பு குளம் ஆழப்படுத்தப்பட வேண்டும்- கணபதிராவ் வலியுறுத்து

ஷா ஆலம், செப் 28- இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடாவில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதைத் தவிர்க்க அங்குள்ள வெள்ள நீர் சேகரிப்பு குளம் தூர்வாரப்படவேண்டும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

கடந்த இரு மாதங்களாக தாமதமடைந்து வரும் இத்திட்டம் காரணமாக ஏற்படும் வெள்ளப் பிரச்சனை இவ்வட்டார மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.

இத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு விட்டது. எனினும், எனினும், அதன் அமலாக்கப் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை. அதிக அளவிலான நீரை சேகரிக்கும் ஆற்றலை அந்த நீர் சேகரிப்பு குளம் கொண்டிராதது குறித்து நாங்கள் கவலையடைகிறோம் என அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் தாம் கிள்ளான் மாவட்ட வடிகால் மற்றும் நீர்பாசனத் துறையுடன் (ஜே.பி.எஸ்.) பேச்சு நடத்தியுள்ளதாக கூறிய அவர், இன்னும் இரு வாரங்களில் அந்த குளத்தை ஆழப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.

அந்த குளத்தில் தூர்வாரும் பணிகள் ஜூலை மாதம் தொடங்கப்படும் என்பதை குறிக்கும் அறிவிப்பு பலகையை ஜே.பி.எஸ். சம்பந்தப்பட்ட இடத்தில் பொருத்தியுள்ளது. எனினும், திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. மேம்பாட்டுத் திட்டம் மற்றம் குத்தகையாளர் நியமனத்திற்காக அவர்கள் காத்திருக்கின்றனர் என்றார் அவர்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக இத்திட்டம் தாமதமானதாக அவர்கள் கூறும் காரணம் ஏற்புடையதாக இல்லை. காரணம் இது, மக்கள் நலன் சார்ந்த முக்கியத் திட்டமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதே இடத்தில் மேற்கொள்ளப்படுவதற்காக கடந்தாண்டு ஒரு கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்ட நீர் உருளைத் திட்டத்தையும் ஜே.பி.எஸ். விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றும் கணபதிராவ் வலியுறுத்தினார்.

ஷா ஆலம் வட்டாரத்தில் நேற்று முன்தினம் பெய்த அடை மழை காரணமாக கோத்தா கெமுனிங் வட்டாரத்தில் சுமார் 70 விழுக்காட்டு பகுதி வெள்ளத்தில் மூழ்கியதாக அவர் குறிப்பிட்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ மூடா, 8வது மைல் புக்கிட் கெமுனிங் வட்டார மக்களுக்கு 150 சமைத்த உணவுப் பொட்டலங்கள் மாநகர் மன்ற உறுப்பினர்கள், கிராமத் தலைவர்கள் மற்றும் இந்திய சமூகத் தலைவர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் தன்னார்வலர் அமைப்புகளும் தனிநபர்களும் கோத்தா கெமுனிங்  தொகுதி சேவை மையத்துடன் இணைந்து பணியாற்றினர் என அவர் மேலும் அவர் தெரிவித்தார்.


Pengarang :