Processed with VSCO with a6 preset
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மக்கள் நலத் திட்டங்களுக்கு கும்புலான் செமெஸ்தா நிறுவனம் 1 கோடி வெள்ளி நன்கொடை

ஷா ஆலம், செப் 30- மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்வதில் உதவுவதற்காக கும்புலான் செமெஸ்தா சென். பெர்ஹாட் நிறுவனம் சிலாங்கூர் அரசுக்கு 1 கோடியே 4 லட்சம் வெள்ளியை நன்கொடையாக வழங்கியுள்ளது.

வருடாந்திர நிதியுதவியாக 60 லட்சம் வெள்ளியும் வாரிசு அறக்கட்டளைக்கு வெ. 400,660.26 நிதியும் சிலாங்கூர் பரிவு மனிதாபிமான நிதிக்கு 10,000 வெள்ளியும் கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்திற்கு 40 லட்சம் வெள்ளியும் அந்நிறுவனம் வழங்கியது.

சிலாங்கூர் மாநில அரசுக்குச் சொந்தமான சுரங்க மற்றும் கனிமவள நிறுவனமான கும்புலான் செமெஸ்தா, சிலாங்கூர் தாஃபிஸ் அறக்கட்டளைக்கு மேலும் 20,000 வெள்ளியையும் அளித்தது.

மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கும்புலான் செமெஸ்தா நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி அப்துல் ரஹ்மான் இஷா மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடம் இந்த நன்கொடையை வழங்கினார்.

கும்புலான் செமெஸ்தா நிறுவனத்தின் நிறுவன சமூகக் கடப்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இத்தொகை கோவிட்-19 பெருந்தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளைக் சமாளிப்பதற்கு உதவும் என்று மந்திரி புசார் நம்பிக்கைத் தெரிவித்தார்.

தேவைப்படும் மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு இந்த நன்கொடை மாநில அரசுக்கு பேருதவி புரியும் என்றும் அவர் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் மணல் சுரங்க நடவடிக்கைகளை நிர்வாகிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கும்புலான் செமெஸ்தா நிறுவனம் தற்போது பொதுப்பணித் துறையின் கீழுள்ள சாலைகளைப் பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளது.

 


Pengarang :