ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBT

கெமென்சே ஆற்றோரத்தை  வலுப்படுத்த வெ.10 லட்சம் ஒதுக்கீடு- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், அக் 1- செமென்சே ஆற்றின் கரைகளை வலுப்படுத்தும் பணிகளை சிலாங்கூர் மாநில வடிகால் நீர்பாசனத் துறை பத்து லட்சம் வெள்ளி செலவில் மேற்கொள்ள விருக்கிறது.

ஆற்றோரங்களில் மண் சரிவு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய 200 மீட்டர் தொலைவுக்கு பைலிங் எனப்படும்  தூண்களை மண்ணில் பதிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சுமார் பத்து லட்சம் வெள்ளி செலவிலான இத்திட்டம் ஒன்று முதல் மூன்று மாதங்களில் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த மண் சரிவு சம்பவம் தொடர்பில் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்திடமிருந்து விளக்கத்தைப் பெற்றப் பின்னர் சிலாங்கூர் மாநில பொருளாதார நடவடிக்கை மன்றம் இத்திட்டத்தை மேற்கொள்ள முடிவெடுத்ததாக அவர் சொன்னார்.

மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் நீர் கசிவதை தடுக்கும் விதமாக அப்பகுதி கென்வஸ் பைகளைக் கொண்டு மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் மண் நகர்வு பிரச்னைக்கு தீர்வு காணும் வரை அங்கு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

மண் சரிவு பிரச்னைக்கான நிரந்தர தீர்வாக அங்கு தடுப்புச் சுவர் அமைப்பதற்கு 60 லட்சம் வெள்ளி தேவைப்படும் எனக் கூறிய அவர், இத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பில் அங்குள்ள பங்களா உரிமையாளர்களுடன் மாவட்ட அதிகாரி பேச்சு நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.

அப்பகுதி முழுவதும் நில நகர்வு இன்னும் நீடிக்கும் காரணத்தால் அதனை அபாயகர மண்டலமாக சிலாங்கூர் மாநில கனிம வள மற்றும் புவி அறிவியல் துறை பிரகடனப்படுத்தியுள்ளது என்றார்.


Pengarang :