Processed with VSCO with a6 preset
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மக்களுக்கான உதவித் திட்டங்களை  மேம்படுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை

ஷா ஆலம், அக் 9- அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கான உதவித் திட்டங்களை மேம்படுத்துவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ஐ.பி.ஆர். எனப்படும் மக்கள் பரிவுத் திட்டத்தின் வாயிலாக மேலும் அதிகமானோர் பயன்பெறுவதற்கு ஏதுவாக அத்திட்டங்கள் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று ஸ்ரீ செத்தியா சட்டடமன்ற உறுப்பினர் ஹிலிமி அபு பாக்கார் கூறினார்.

அத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை எனக் கூறிய அவர், ஐ.பி.ஆர். இல் உள்ள ஒவ்வொரு திட்டத்திற்கு நிதி அதிகரிக்கப்பட வேண்டும் என்றார்.

ஒரு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி முடிந்து விடும் பட்சத்தில் ஆண்டு முடியும் வரை கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று நேற்று இங்கு நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான வரவு  செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வில் அவர் குறிப்பிட்டார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் பேசிய பலாக்கோங் உறுப்பினர் வோங் சியு கீ, பொருளாதார மீட்சி, இளம் வாக்காளர்களை உள்ளடக்கிய நடவடிக்கைகள், மகளிருக்கான ஆக்கத்திறன் திட்டங்கள் குறித்து கருத்துக்களை வெளியிட்டார்.

மாநிலத்தில் குறிப்பாக பலாக்கோங் தொகுதியில்  பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வதில் இம்மூன்று அம்சங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளதாக அவர் சொன்னார்.

சிலாங்கூரை சுத்தமான மற்றும் பசுமை நிறைந்த மாநிலமாக உருவாக்குவதிலும் குப்பைகளை அகற்றுவதிலும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று செந்தோசா உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தினார்.

துரித வளர்ச்சி கண்டு வரும் மாநிலமாக சிலாங்கூர் விளங்கினாலும் குப்பைகளை அகற்றுவதில் அது இன்னும் பிரச்னைகளை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :