ECONOMYMEDIA STATEMENTNATIONAL

விளையாட்டுத் துறைக்கு  மீண்டும் புத்துயிரூட்ட வெ.700,000 ஒதுக்கீடு

பந்திங், அக் 9- விளையாட்டாளர்களுக்கு மீண்டும் பயிற்சியளிப்பது உள்பட மாநிலத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதும் நடவடிக்கைகளுக்காக சிலாங்கூர் மாநில அரச 720,700 வெள்ளி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டின் வழி விளையாட்டுச் சங்கங்கள், மாவட்ட விளையாட்டு மன்றங்கள், சுக்மா விளையாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகள் பயன் பெறுவர் என்று விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார்.

அந்த ஒதுக்கீட்டில் ஒரு பகுதி விளையாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அலவன்ஸ் வழங்குவதற்கும் எஞ்சிய பகுதி விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நோய்த் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைப்பதில் இந்த உதவி ஓரளவு துணை புரியும் என்பதோடு அவர்கள் தொடர்ந்து போட்டியிடும் ஆற்றலைக் கொண்டிருப்பதையும் உறுதி செய்யும் என்றார் அவர்.

இன்று இங்குள்ள பாராகிலிடிங் புக்கிட் ஜூவாரா திடலில் 2021 ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் விளையாட்டுத் தினத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, சுக்மா போட்டியை ஏற்று நடத்த இதர மாநிலங்கள் முன்வராவிட்டால் அப்போட்டியை கால்பந்து, குறிசுடுதல், நீச்சல் போன்ற 16 முக்கிய விளையாட்டுகளுடன் ஏற்று நடத்த சிலாங்கூர் தயாராக உள்ளதாகவும் அவர் சொன்னார்.

அந்த போட்டி இம்முறை ஜொகூரில் நடத்தப்பட வேண்டும். எனினும், அம்மாநிலம் இன்னும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் உள்ளது. மற்ற மாநிலங்கள் அப்போட்டியை நடத்த முன்வராவிட்டால் சிலாங்கூர் அதனை ஏற்று நடத்த தயாராக உள்ளது என்றார் அவர்.

 


Pengarang :