Exco Kerajaan Negeri, Rodziah Ismail memberi penerangan kepada penerima bantuan sebelum menyerahkan alatan ketika Majlis penyerahan geran alatan Sitham Yayasan Hijrah Selangor di Bestari Jaya, Kuala Selangor pada 11 Oktober 2021. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

முதல் முயற்சியே பலன் கொடுத்தது- “சித்தம்“ திட்டத்தில் உதவி பெற்ற விஸ்வாத் மகிழ்ச்சி

கோல சிலாங்கூர், அக் 12- உதவி கோரி சிலாங்கூர் அரசிடம் முதல் முறையாக செய்த விண்ணப்பமே உரிய பலனைத் தரும் என்று கால்நடைப் பண்ணை உரிமையாளரான எம்.விஸ்வாத் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

கால்நடைத் தீவன பதனீட்டு இயந்திரத்தைப் பெறுவதற்காக சித்தம் எனப்படும் சிலாங்கூர் இந்தியர் தொழில் ஆர்வலர் மையத்திடம் சில மாதங்களுக்கு முன்னர் தாம்  விண்ணப்பம் செய்திருந்ததாக  விஸ்வாத் கூறினார்.

இப்போது நான் அந்த இயந்திரத்திற்கு உரிமையாளராகி விட்டேன். விண்ணப்ப பரிசீலனை வெகுவிரைவில் முடிந்து விட்டது. கோவிட்-19 காரணமாக இயந்திரம் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இந்த உதவியை வழங்கிய மாநில அரசுக்கு நான் நன்றிக் கூறக் கடமைப்பட்டுள்ளேன் என்றார் அவர்.

தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் தலைமையில் இங்குள்ள தாமான் ராஜா மூடா மூசாவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் 8,400 வெள்ளி மதிப்பிலான அந்த இயந்திரம் விஸ்வாத்திடம் வழங்கப்பட்டது.

நாற்பது மாடுகளை வைத்திருக்கும் தமக்கு இந்த இயந்திரம் அவசியமாக தேவைப்பட்டதாக 51 வயதான விஸ்வாத் கூறினார்.

முன்பு இந்த இயந்திரம் இல்லாத நிலையில் நாளொன்றுக்கு 100 கிலோ மாட்டுத் தீவினத்தை மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது. நாற்பது மாடுகளுக்கு அந்த தீவனம் போதுமானதாக இல்லை. எனினும், இப்போது இந்த இயந்திரத்தின் வழி தினசரி 300 கிலோ தீவினத்தை உற்பத்தி செய்ய முடிகிறது என்றார் அவர்.

கடந்த 30 ஆண்டுகளாக இவ்வட்டாரத்தில் இறைச்சி மற்றும் பால் விற்பனையில் இவர் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் ஈடுபாடு காட்டி வரும் இந்திய தொழில் முனைவோருக்கு பயிற்சி, நிதியுதவி, வர்த்தக உபகரணங்களை வழங்குவதை இலக்காக கொண்டு கடந்த 2019 ஆம்  ஆண்டில் இந்த சித்தம் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.

 


Pengarang :