ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

தெலுக் பங்ளிமா காராங் தமிழ்ப்பள்ளியின் கூரை சரிந்தது

சிஜங்காங், அக் 13- தெலுக் பங்ளிமா காராங் தமிழ்ப்பள்ளியின் ஒரு பகுதி கூரை நேற்று சரிந்து விழுந்தது. இச்சம்பவத்திற்கு மக்கிய சட்டங்களே காரணம எனக் கண்டறியப் பட்டுள்ளது.

எனினும், நேற்று மாலை 2.00 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் யாருக்கும் காயமோ உயிருட்சேதமோ ஏற்படவில்லை என்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத்  தலைவர் சி. கமலநாதன் கூறினார்.

கோல லங்காட் மாவட்டத்தின் பெரிய தமிழ்ப்பள்ளியாக இப்பள்ளி விளங்குகிறது. இப்பள்ளி மிகவும் பழைய கட்டிடத்தைக் கொண்டிருப்பதால் அதனை அடிக்கடி பழுதுபார்த்தும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்று அவர் சொன்னார்.

இத்தகைய அசம்பாவிதங்கள் தொடர்ந்து நிகழாதிருப்பதை உறுதி செய்ய இவ்விவகாரத்தை தாங்கள் மாவட்ட கல்வி இலாகா மற்றும் பொதுப்பணித் துறையின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பழைய கட்டிடத்தால் ஏற்படும் பாதிப்பு ஒருபுறமிருக்க, கடுமையாக மழை பெய்யும் ஒவ்வொரு முறையும் பள்ளியில் வெள்ளம் ஏற்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

ஒரு மணி நேரத்திற்கு  மழை நீடித்தால் சுமார் 0.3 மீட்டர் உயரத்திற்கு  நீர் பெருகி விடுகிறது. வருடத்திற்கு குறைந்தது இரு முறையாவது இத்தகைய சம்பவத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்டத் தரப்பினர் இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.


Pengarang :