ECONOMYMEDIA STATEMENTPBT

நீர் சுத்திகரிப்பு மையத்தில் பழுதுபார்ப்பு பணி 76 விழுக்காடு பூர்த்தி- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், அக் 13- சுங்கை சிலாங்கூர் முதல் கட்ட நீர் சுத்திகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நிர்ணயிக்கப்பட்டதைவிட முன்னதாகவே முற்றுப் பெறும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இன்று மாலை 3.00 மணி வரை 76.4 விழுக்காட்டுப்  பணிகள் பூர்த்தியாகி விட்டது என ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தம்மிடம் தெரிவித்தாக அவர் சொன்னார்.  மாலை 3.00 மணி வரை 65 விழுக்காட்டுப் பணிகள் மட்டுமே பூர்த்தியாகும் என முன்னதாக கணிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

நீர் சுத்திகரிப்பு மையத்தில் பணிகள் சீராகவும் விரைவாகவும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  திட்டமிடப்பட்டதைக் காட்டிலும் விரைவாக பணிகள் முழுமையடைந்து விடும் என்றும் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் என்னிடம் தெரிவித்தது என்றார் அவர்.

இந்த பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் இன்றிரவுக்குள் முற்றுப் பெற்று விடும் என்றும் நீர் விநியோகம் திட்டமிடப்பட்டதைப் போல் கட்டங் கட்டமாக வழக்க நிலைக்கு திரும்பும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த சுத்திகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்படும் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக பெட்டாலிங், கோலாலம்பூர், ஷா ஆலம், கிள்ளான், உலு சிலாங்கூர், கோல லங்காட், கோல சிலாங்கூர்  ஆகிய மாவட்டங்களில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.


Pengarang :