ECONOMYMEDIA STATEMENTNATIONALTOURISM

லங்காவி தீவில் வெளிநாட்டினரை அனுமதிக்க சுற்றுலா அமைச்சு பரிசீலனை

கோலாலம்பூர், அக் 14- லங்காவி சுற்றுலா முன்னோடித் திட்டத்தை அந்நிய நாட்டினருக்கும் திறந்து விடுவதற்கு தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் சுற்றுலா,கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரத்திற்கு  புத்துயிரூட்டுவதற்கான நடவடிக்கையை மலேசியா மேற்கொள்வதற்கு இந்நடவடிக்கை அவசியமாவதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார்.

லங்காவி முன்னோடித் திட்டத்தின் ஒரு பகுதியாக அந்த சுற்றுலாத் தீவுக்கு மட்டும் சில நாடுகளின் சுற்றுப்பயணிகளை அனுமதிப்பதற்கான பரிந்துரையை நான் முன்வைத்துள்ளேன். இதன் தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் அறிவிப்பிற்காக காத்திருப்போம் என்றார் அவர்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வதற்கான வழிகளில் இதுவும் ஒன்றாகும் என்று மேலவையில் கேள்வி நேரத்தின் போது அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கான சாத்தியம் உள்ளதா என்று செனட்டர் அகமது யாஹ்யா கேள்வியெழுப்பிருந்தார்.

முன்னதாக அவையில் பேசிய நான்சி,  சுற்றுலா முன்னோடித் திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 16 ஆம் தேதி முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரை 85,921 சுற்றுப்பயணிகள் அந்த அந்த தீவுக்கு வருகை புரிந்ததாக சொன்னார்.

லங்காவி அனைத்துலக விமான நிலையம் வாயிலாகவும் கடல் மார்க்கமாகவும் அச்சுற்றுப்பயணிகள் அந்த தீவுக்கு வருகை புரிந்தனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

 


Pengarang :