Dato’ Menteri Besar, Dato’ Seri Amirudin Shari membuat lawatan ke tapak Balai Polis Taman Melawati di Taman Melawati, Hulu Klang pada 17 Oktober 2021. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

தாமான் மெலாவத்தி புதிய போலீஸ் நிலையம் இவ்வாண்டு இறுதியில் செயல்படத் தொடங்கும்

உலு கிளாங், அக் 18- தாமான் மெலாவத்தி புதிய போலீஸ் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் இதுவரை 85 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளது. இவ்வாண்டு இறுதிவாக்கில் அந்நிலையம் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 0.6 ஹெக்டர் நிலப்பரப்பில் சைம் டார்பி புரொப்பர்ட்டி நிறுவனத்தின் சொத்துடைமை விற்பனை மையமாக செயல்பட்டு வந்த இக்கட்டிடத்தை போலீஸ் நிலையமாக மாற்றும் பணி கடந்தாண்டு மே மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பத்து லட்சம் வெள்ளி செலவிலான இக்கட்டிடத்தின் நிர்மாணிப்பு பணியை அந்த சொத்துடைமை நிறுவனம் நிறுவன சமூக கடப்பாட்டின் (சி.எஸ்.ஆர்.) அடிப்படையில் மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.

மெலாவத்தி போலீஸ் நிலையம் தற்போது கடைத் தொகுதியில் செயல்பட்டு வருகிறது.  அதிகரித்து வரும்  தேவைகளை ஈடுசெய்யும் வசதியை அந்த நிலையம் கொண்டிருக்கவில்லை. விசாலமான மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்ட புதிய கட்டிடத்தைப் பெறுவதன் மூலம் போலீசார் தங்கள் பணிகளை சீராக  மேற்கொள்ள இயலும் என்றார் அவர்.

சுற்றுவட்டாரங்களில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மெலாவத்தி மால் பேரங்காடி மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் காரணமாக இப்பகுதி மேலும் பரபரப்புமிக்கதாக ஆகும் என்பதால் அதற்கேற்ற வகையில் போலீஸ் நிலையமும் அமைந்திருப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

இந்த வருகையின் போது போலீஸ் நிலையத்தின் தேவைகளை ஈடுசெய்வதற்காக பத்தாயிரம் வெள்ளியை மந்திரி புசார் அம்பாங் மாவட்ட துணை போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். முகமது அஸாம் இஸ்மாயிலிடம் வழங்கினார்.


Pengarang :