ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

அரசியல் பேரணி, சமூக நிகழ்வுகளுக்கு நாளை முதல் நவம்பர் 27 வரை தடை- கைரி

கோலாலம்பூர், அக் 24- தேர்தல் தொடர்புடைய பேரணிகள் மற்றும் சமூக நிகழ்வுகளுக்கு நாளை தொடங்கி வரும் நவம்பர் மாதம் 27 ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.

கோவிட்-19 பெருந்தொற்றின் திடீர் அதிகரிப்பை தவிர்க்கவும் நோய்ப் பரவலை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

தேர்தல் இயந்திரங்களைத் தொடக்கி வைக்கும் நிகழ்வுகளுக்கும் இந்த தடை பொருந்தும் என்று இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றாத பேரணிகள் மற்றும் சமூக நடவடிக்கைகளே நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பதற்கு காரணமாக இருந்துள்ளது சுகாதார அமைச்சு இதுவரை மேகொண்ட கண்காணிப்புகள் வழி தெரிய வந்துள்ளதாக அவர் சொன்னார்.

வரும் நவம்பர் மாதம் 20 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா மாநில  தேர்தலை முன்னிட்டு இத்தகைய நடவடிக்கைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக  அவர் கூறினார்.

நாட்டில் கோவிட்-19 பெருந் தொற்று குறிப்பாக டெல்டா வகை தொற்று பரவல் அதிகரித்து வருவது மற்றும் சமூகத்தில் நோய்த் தொற்று தொடர்ந்து உயர்ந்து வருவது சமூகத்தில் இந்நோய்ப் பரவல் மேலும் அதிகரிப்பதற்குரிய அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான  வேட்பு மனுத்தாக்கல் நவம்பர் 8 ஆம் தேதியும் தேர்தல் நவம்பர்  20 ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த திங்கள் கிழமை அறிவித்தது.


Pengarang :